சனி, 10 மே, 2014

பிளஸ்-2 தேர்வில் ஈரோடு மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் இடம்

ஈரோடு,
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்து புதிய சாதனை படைத்தது.
தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்று புதிய சாதனை படைத்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 183 பள்ளிக்கூடங்களில் படித்த 26 ஆயிரத்து 464 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 25 ஆயிரத்து 683 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இது 97.05 சதவீதமாகும்.
மாணவர்கள் 12 ஆயிரத்து 810 பேர் தேர்வு எழுதியதில் 12 ஆயிரத்து 355 பேர் வெற்றி பெற்றனர். இது 96.448 சதவீதம் தேர்ச்சியாகும். இதுபோல் 13 ஆயிரத்து 654 மாணவிகள் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 328 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 97.612 சதவீதம் தேர்ச்சியாகும்.
ஆக ஈரோடு மாவட்டத்தில் 97.05 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்து உள்ளனர். இதனால் தமிழக அளவில் ஈரோடு மாவட்டம் முதல் முறையாக முதலிடத்தை பெற்று சாதனை படைத்து உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் 93.35 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.28 ஆக இருந்தது.
சாதனை
இந்த ஆண்டு இதுவரை இல்லாத தேர்ச்சி விகிதத்தை பெற்று ஈரோடு கல்வி மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சியால் புதிய சாதனையை படைத்து உள்ளது.
இதுபற்றி ஈரோடு மாவட்டத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு கலெக்டர் எஸ்.மதுமதி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் புதிய சாதனை படைத்து உள்ளது. மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்து சாதனை படைத்து உள்ளன. இதுபோல் இயற்பியல் பாடத்தில் 208 பேரும், வேதியியல் பாடத்தில் 113 பேரும், உயிரியல் பாடத்தில் 53 பேரும், தாவரவியல் பாடத்தில் ஒருவரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
புள்ளியியல் பாடத்தில் ஒருவரும், கணினி அறிவியல் பாடத்தில் 94 பேரும், கணித பாடத்தில் 316 பேரும் 200-க்கு 200 பெற்று சாதனை படைத்து உள்ளனர். மேலும், பொருளியல் பாடத்தில் 77 பேரும், வணிகவியல் பாடத்தில் 160 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 158 பேரும், வர்த்தக கணிதம் பாடத்தில் 40 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இவர்கள் தவிர தொழிற்கல்வி மாணவ-மாணவிகள் 2642 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
இந்த சாதனை படைக்க காரணமாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் எஸ்.மதுமதி கூறினார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட வாரியாக....
மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-
ஈரோடு - 97.05
நாமக்கல் - 96.59
விருதுநகர் - 96.12
பெரம்பலூர் - 96.03
தூத்துக்குடி - 95.72
கன்னியாகுமரி - 95.14
கோவை - 94.89
திருநெல்வேலி - 94.37
திருச்சி - 94.36
திருப்பூர் - 94.12
சிவகங்கை - 94.06
தர்மபுரி - 93.24
ராமநாதபுரம் - 93.06
கரூர் -92.97
தேனி - 92.74
மதுரை - 92.34
சென்னை - 91.90
சேலம் - 91.53
திண்டுக்கல் - 90.91
தஞ்சாவூர் - 89.78
புதுக்கோட்டை - 89.77
புதுச்சேரி - 89.61
கிருஷ்ணகிரி - 89.37
திருவள்ளூர் - 88.23
காஞ்சீபுரம் - 87.96
நாகப்பட்டினம் - 87.95
ஊட்டி - 86.15
விழுப்புரம் - 85.18
வேலூர் - 85.17
கடலூர் - 84.18
திருவாரூர் - 83.70
அரியலூர் - 79.55
திருவண்ணாமலை- 74.4
சென்னை மாவட்டத்தில் தான் அதிக மாணவர்களாக 53 ஆயிரத்து 73 பேர் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டத்தில் தான் குறைந்த மாணவர்களாக 6,250 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

சமஸ்கிருத பாடப்பிரிவில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த ஈரோடு மாணவ-மாணவிகள்

ஈரோடு,
சமஸ்கிருத பாடப்பிரிவில் மாநில அளவில் முதல் 3 இடங்களை ஈரோடு மாணவ-மாணவிகள் பிடித்தனர்.
சமஸ்கிருத பாடப்பிரிவில்...
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சமஸ்கிருத பாடப்பிரிவுகளில் ஈரோடு மாணவ-மாணவிகள் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளிக்கூட மாணவி என்.விஷ்ணுபிரியா சமஸ்கிருத பாடத்தை முதல் மொழியாக எடுத்து 1,200-க்கு 1,193 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
சமஸ்கிருதம் - 199
ஆங்கிலம் - 194
இயற்பியல் - 200
வேதியியல் -200
கணிதம் -200
கணினி அறிவியல் - 200
மொத்தம் - 1,193
மேற்கண்ட மதிப்பெண்களை மாணவி விஷ்ணுபிரியா பெற்று உள்ளார்.
கணினி என்ஜினீயர்
இவருடைய தந்தை நடராஜ், துடுப்பதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட தலைமை ஆசிரியராக உள்ளார். தாயார் பத்மாவதி, வீட்டை கவனித்து வருகிறார். மாணவி விஷ்ணுபிரியா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடமும், மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி விஷ்ணு பிரியா கூறியதாவது:-
நான் யு.கே.ஜி. முதல் பி.வி.பி. பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறேன். பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொடுக்கும் பாடத்தை தினமும் படித்து முடித்து விடுவேன். தனியாக டியூசன் எதுவும் செல்லவில்லை. பள்ளிக்கூட நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் சிறந்த மதிப்பெண் பெற முடிந்தது. அதுவும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில் கணினி என்ஜினீயர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே கணினி அறிவியல் எடுத்து படிக்க உள்ளேன்.
இவ்வாறு மாணவி விஷ்ணுபிரியா கூறினார்.
மாணவி ஷாலினி
அதே பள்ளிக்கூட மாணவி ஷாலினி 1200-க்கு 1192 மதிப்பெண்கள் பெற்றார். இவரும் முதல் மொழியாக சமஸ்கிருதம் எடுத்து படித்ததால், மாநில அளவில் பிறமொழி பாடப்பிரிவில் 2-ம் இடத்தை பிடித்தார்.
இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
சமஸ்கிருதம் - 199
ஆங்கிலம் - 196
பொருளியல் -198
வணிகவியல் - 199
கணக்குபதிவியல் - 200
வர்த்தக கணிதம் - 200
மொத்தம் - 1,192
மேற்கண்டவாறு மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
கோடை விடுமுறைக்காக சென்னை போரூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்த மாணவி மற்றும் பெற்றோர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஷாலினி கூறுகையில் : நான் சேலத்தை சேர்ந்தவள் எனது தந்தை தியாகராஜன் துணி வியாபாரம் செய்து வருகிறார். நான் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பயின்றேன். பிளஸ்-2 தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்காக எனது பெற்றோருடன் போரூரில் உள்ள எனது தாத்தா வீட்டிற்கு வந்தேன். நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது அதில் நான் 1192 மதிப்பெண்கள் எடுத்து தோச்சி பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடம் பிடித்துள்ளேன் என்று எனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தோழிகள் எல்லாம் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதற்கு நன்றி, சமஸ்கிருதத்தை பாட மொழியாக எடுத்து படித்தேன். நான் பள்ளியில் நடந்த தேர்வுகளில் எல்லாம் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் எனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்¢கள் என்னை திட்டாமல் உற்சாகப்படுத்துவார்கள். அதுவே எனக்கு பக்க பலமாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் டெல்லி சென்று படிக்க வேண்டும் என்று அந்த மாணவி தெரிவித்தார்.
இதையடுத்து சமஸ்கிருத மொழி பாடத்தை எடுத்து படித்து மாநிலத்தில் 2வது இடம் பிடித்த மாணவி ஷாலினிக்கு அவரது பெற்றோர்கள், உறவினர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவர் பொன்சங்கர்
பிறமொழி பாடப்பிரிவில் சமஸ்கிருதம் பாடத்தை முதல் மொழியாக எடுத்து படித்த ஈரோடு பவளத்தாம்பாளையம் ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மாணவர் கே.பொன்சங்கர் 1,200-க்கு 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
சமஸ்கிருதம் - 199
ஆங்கிலம் - 194
இயற்பியல் - 200
வேதியியல் - 198
உயிரியல் - 200
கணிதம் - 200
மொத்தம் -1,191
மேற்கண்டவாறு மாணவர் பொன்சங்கர் மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
மாணவர் கே.பொன்சங்கர், நசியனூர் அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை அதே பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் காந்திமதி வீட்டை கவனித்து வருகிறார்.
ராணுவத்தில் டாக்டர்
சிறந்த மதிப்பெண்கள் பெற்றது குறித்து மாணவர் பொன்சங்கர் கூறியதாவது:-
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தால் அனைத்து மாணவர்களாலும் சாதிக்க முடியும். நானும் சாதிக்க வேண்டும் என்று நினைத்து படித்தேன். இதற்கு எனது பள்ளிக்கூட நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் உதவியாக இருந்தனர்.
நான் ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்காக புனே ராணுவ மருத்துவ கல்லூரியில் முதல் கட்ட நுழைவுத்தேர்வு எழுதி இருக்கிறேன். அதிலும் வெற்றி பெற்று ராணுவத்தில் சேவை செய்வேன். பின்னர் பொதுமக்களுக்கு சேவை செய்வேன்.
இவ்வாறு மாணவர் பொன் சங்கர் கூறினார்.
இவரை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், பள்ளிக்கூட தாளாளர் காசியண்ணன், முதல்வர் முருகசாமி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஆட்டோ டிரைவரின் மகன் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிக்க விரும்புவதாக பேட்டி

ஈரோடு,
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதலிடத்தை ஆட்டோ டிரைவரின் மகன் நவீன்குமார் பிடித்தார். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
ஆட்டோ டிரைவர் மகன்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் 1,200-க்கு 1,189 மதிப்பெண்கள் பெற்று ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவர் எஸ்.நவீன்குமார் முதல் இடம் பிடித்தார்.
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த இவருடைய தந்தை சண்முகானந்தம். ஈரோடு பஸ்நிலையத்தில் ஆட்டோ டிரைவராக உள்ளார். தாயார் மஞ்சு, ஈரோட்டில் தனியார் பார்சல் அலுவலகத்தில் தினக்கூலியாக உள்ளார். ஒரே தங்கை யுவஸ்ரீ, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருக்கிறார்.
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்றது குறித்து மாணவர் எஸ்.நவீன்குமார் கூறியதாவது:-
ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்
மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்து படித்தேன். ஆனால் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறேன். இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எனது இந்த வெற்றிக்கு எங்கள் பள்ளிக்கூட தாளாளர் கே.கே.பாலுசாமி, முதல்வர் காந்திமதி மற்றும் வகுப்பாசிரியர்கள் தான் காரணம். எனக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமை மிகவும் பிடிக்கும். எனவே அவரைப்போல விஞ்ஞானி ஆகும் ஆசை உள்ளது. செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பும் விஞ்ஞானியாக நான் மாற வேண்டும். எனவே ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிக்க விரும்புகிறேன். சென்னை எம்.ஐ.டி.யில் பி.டெக் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்க உள்ளேன். இதையும் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்.
இவ்வாறு மாணவர் எஸ்.நவீன்குமார் கூறினார்.
இவருடைய தாயார் மஞ்சு கூறும்போது, ‘எங்கள் குடும்பத்திலேயே 10-ம் வகுப்புக்கு மேல் படித்தது எனது மகன்தான். அவன் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து அவனுடைய விருப்பப்படி படிக்க வைப்போம்’ என்றார்.
சிறந்த என்ஜினீயர் ஆக வேண்டும்...
ஈரோடு மாவட்ட அளவில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,188 மதிப்பெண்கள் பெற்று திண்டல் பி.வி.பி. பள்ளிக்கூட மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ 2-ம் இடத்தை பிடித்தார். இவருடைய தந்தை சி.கந்தசாமி, பெருந்துறை சிப்காட் மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக உள்ளார். தாயார் கே.சரோஜா, வீட்டை கவனித்து வருகிறார். ஒரே தங்கை ஹர்ஷினி ஸ்ரீ, 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பிரீத்தி ஸ்ரீ இந்த வெற்றி குறித்து கூறியதாவது:-
நான் மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று படித்தேன். ஆனால் கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் மாவட்ட அளவில் 2-ம் இடம் கிடைத்து உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கணினி என்ஜினீயரிங் படித்து சிறந்த என்ஜினீயர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி சுவாதி
1,200-க்கு 1,187 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தை பிடித்த ஈரோடு இந்து கல்வி நிலைய பள்ளிக்கூட மாணவி எல்.சுவாதி, வீரப்பன்சத்தரம் பெரியவலசு பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை லோகநாதன், ஜவுளித்தொழில் செய்து வருகிறார். தாயார் ஜெகதாம்பாள் வீட்டை கவனித்து வருகிறார்.
மாணவி சுவாதி கூறும்போது, ‘என்ஜினீயரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால் என்ஜினீயரிங்கில் என்ன பிரிவு எடுப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. எனது இந்த வெற்றிக்கு பள்ளிக்கூட நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்தான் காரணம், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
கலெக்டர் பாராட்டு
சாதனை படைத்த மாணவ-மாணவிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரன், இந்து பள்ளிக்கூட துணைத்தலைவர் அருண்குமார், பள்ளிக்கூட முதல்வர் ஏ.காந்திமதி, பி.வி.பி பள்ளிக்கூட தாளாளர் டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், அருணா ராமகிருஷ்ணன், முதல்வர் என்.எஸ்.கார்த்திகேயணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாவட்ட அளவில் ஈரோடு இந்து கல்வி நிலைய மாணவர் எஸ்.நவீன்குமார் முதலிடம் பிடித்து சாதனை 2-வது இடம் மாணவி கே.எஸ்.பிரீத்திஸ்ரீ, 3-வது இடம் எல்.சுவாதி

ஈரோடு,
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் ஈரோடு இந்து கல்வி நிலைய மாணவர் எஸ்.நவீன்குமார் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். பி.வி.பி. பள்ளிக்கூட மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ 2-வது இடத்தையும், ஈரோடு இந்து கல்வி நிலையம் மாணவி எல்.சுவாதி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
முதல் 3 இடங்கள்
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுதிய 26 ஆயிரத்து 464 மாணவ-மாணவிகளில் 25 ஆயிரத்து 683 பேர் வெற்றி பெற்றனர். இது 97.05 சதவீதமாகும்.
இதில் 1200-க்கு 1,189 மதிப்பெண்கள் பெற்ற ஈரோடு மாமரத்துப்பாளையம் ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவர் எஸ்.நவீன்குமார் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தார்.
திண்டல் பாரதி வித்யா பவன் (பி.வி.பி.) பள்ளிக்கூட மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ 1200-க்கு 1188 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடத்தையும், மாமரத்துப்பாளையம் ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவி எல்.சுவாதி மாவட்ட அளவில் 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
மதிப்பெண்கள்
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் எஸ்.நவீன்குமார் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ் -196
ஆங்கிலம்- 195
இயற்பியல்- 199
வேதியியல்- 200
கணிதம்- 200
கணினி அறிவியல்- 199
மொத்தம்- 1,189
2-வது இடம் பிடித்த மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ்- 197
ஆங்கிலம்- 196
இயற்பியல்- 200
வேதியியல்- 199
கணிதம்- 198
கணினி அறிவியல்- 198
மொத்தம்- 1,188
3-வது இடம் பிடித்த மாணவி எல்.சுவாதி பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ்- 195
ஆங்கிலம்-192
இயற்பியல்- 200
வேதியியல்-200
கணிதம்- 200
கணினி அறிவியல்-200
மொத்தம்- 1,187
200-க்கு 200
முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர் நவீன்குமார் வேதியியல் மற்றும் கணித பாடத்தில் 200-க்கு 200 பெற்று உள்ளார். 2-ம் இடம் பிடித்த மாணவி பிரீத்திஸ்ரீ இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 பெற்று உள்ளார். ஆனால் 3-ம் இடம் பிடித்து உள்ள மாணவி எல்.சுவாதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் என்று 4 முக்கிய பாடங்களிலும் 200-க்கு 200 பெற்று சாதனை படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு

ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்கும், மாநில அளவில் முதலிடத்தை பெற்றதற்கும், ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
மாநில அளவில் முதலிடம்
ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள் இருந்தாலும் பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி, பொதுத்தேர்வுகளில் முதல் இடம் பிடிப்பது என்பது எட்டாத கனியாகவே இருந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் முதன்மை கல்வி அதிகாரிகளான குப்புசாமி, பொன்.குமார், வை.குமார் ஆகியோர் ஈரோடு மாவட்ட கல்வித்துறையில் செய்த மாற்றங்களால் ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து வந்தது. கடந்த 2012–ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதன் முதலாக மாநில அளவில் அதிக தேர்ச்சியை பெற்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து அப்போதைய ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஸ்ரீதேவி தீவிர நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் பயனாக கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டம் அரசு பள்ளிக்கூட தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தது. இந்தநிலையில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்ற பி.அய்யண்ணனின் கடுமையான முயற்சியால், ஈரோடு மாவட்டம் இந்த ஆண்டு நீண்ட கால கனவாக முதல் இடம் என்ற அந்தஸ்தை பெற்று உள்ளது. இது கல்வியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.
ஆசிரியர்களுக்கு பாராட்டு
குறிப்பாக இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன் கூறியதாவது:–
இந்த வெற்றிக்கான அனைத்து பெருமைகளும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களையும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையே சாரும், நாங்கள் வழங்கிய அத்தனை வழிமுறைகளையும் தட்டாமல் அப்படியே நிறைவேற்றி, இந்த சாதனையை படைத்து உள்ளார்கள். எனவே ஆசிரியர்களுக்கு எனது பாராட்டினையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறினார்.