‘வீணாகக் கடலில் கலக்கும் நதி நீரைத் தமிழகத்துக்குக் கொடுத்தால் என்ன?' என்பது போன்ற குரலை நாம் அடிக்கடி கேட்கலாம். தமிழகத்துடன் நதிநீர்ப் பங்கீடு செய்துகொள்ளப்படுவது சரிதான். ஆனால், நதிநீர் கடலில் வீணாகக் கலக்கிறது என்ற வாதம்தான் தவறு.
கடல்களின் முக்கிய நீர் ஆதாரங்களில் நதிகளும் அடக்கம். திடீரென்று, உலகில் உள்ள எல்லா நதிகளையும் கடலில் கலக்கவிடாமல் தடுத்துவிடுகிறோம் என்று கற்பனையாக வைத்துக்கொள்வோம். அப்போது என்ன ஆகும்?
கடல் மட்டம் குறிப்பிட்ட அளவு குறைந்துவிடும். உலகின் தட்பவெப்பத்தை நிர்ணயிப்பதில் கடல்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே, கடல் மட்டம் அளவுக்கு அதிகமாக உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் உலகம் பேரழிவைச் சந்திக்கும்.
மேலும், கடல் நீரின் உப்புத் தன்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில், கடலில் கலக்கும் ஆற்று நீரும் ஒரு முக்கியக் காரணம். அதிக அளவில் ஆறுகள் கலக்கும்போது, அந்தக் கடலின் உப்புத்தன்மை குறிப்பிடத்தகுந்த அளவு குறைவாக இருக்கும். மிகக் குறைவான ஆறுகள் கலக்கும் கடலில், உப்புத்தன்மை அதிகமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, பால்ட்டிக் கடலில் ஏராளமான ஆறுகள் கலப்பதால் அதன் உப்புத்தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால், ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயுள்ள செங்கடல் பகுதியில் மிகக் குறைந்த அளவே நதிகள் கலப்பதால் அந்தப் பகுதியில் உப்புத்தன்மை உலகிலேயே மிகவும் அதிக அளவாக 40% காணப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், ஒரு நதி உருவான இடத்திலிருந்து கடலில் கலப்பது வரை, அந்த நதியின் நீரை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு இயற்கைச் சூழல்தொகுதிகள் (Eco system) உருவாகியிருக்கும். பாதியிலேயே நதியைத் தடுத்துவிட்டால் அந்தச் சூழல்தொகுதிகள் அழிவுக்கு உள்ளாகி, இயற்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்.
இயற்கையின் அம்சங்களில், செயல்பாடுகளில் ஏதுவுமே வீண் இல்லை. எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை. எனவே, இயற்கையின் போக்கை இயற்கையிடமே விட்டுவிடுவதுதான் நம் அனைவருக்கும் நல்லது.