சனி, 10 மே, 2014

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஆட்டோ டிரைவரின் மகன் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிக்க விரும்புவதாக பேட்டி

ஈரோடு,
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதலிடத்தை ஆட்டோ டிரைவரின் மகன் நவீன்குமார் பிடித்தார். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
ஆட்டோ டிரைவர் மகன்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் 1,200-க்கு 1,189 மதிப்பெண்கள் பெற்று ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவர் எஸ்.நவீன்குமார் முதல் இடம் பிடித்தார்.
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த இவருடைய தந்தை சண்முகானந்தம். ஈரோடு பஸ்நிலையத்தில் ஆட்டோ டிரைவராக உள்ளார். தாயார் மஞ்சு, ஈரோட்டில் தனியார் பார்சல் அலுவலகத்தில் தினக்கூலியாக உள்ளார். ஒரே தங்கை யுவஸ்ரீ, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருக்கிறார்.
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்றது குறித்து மாணவர் எஸ்.நவீன்குமார் கூறியதாவது:-
ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்
மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்து படித்தேன். ஆனால் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறேன். இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எனது இந்த வெற்றிக்கு எங்கள் பள்ளிக்கூட தாளாளர் கே.கே.பாலுசாமி, முதல்வர் காந்திமதி மற்றும் வகுப்பாசிரியர்கள் தான் காரணம். எனக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமை மிகவும் பிடிக்கும். எனவே அவரைப்போல விஞ்ஞானி ஆகும் ஆசை உள்ளது. செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பும் விஞ்ஞானியாக நான் மாற வேண்டும். எனவே ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிக்க விரும்புகிறேன். சென்னை எம்.ஐ.டி.யில் பி.டெக் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பிக்க உள்ளேன். இதையும் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்.
இவ்வாறு மாணவர் எஸ்.நவீன்குமார் கூறினார்.
இவருடைய தாயார் மஞ்சு கூறும்போது, ‘எங்கள் குடும்பத்திலேயே 10-ம் வகுப்புக்கு மேல் படித்தது எனது மகன்தான். அவன் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து அவனுடைய விருப்பப்படி படிக்க வைப்போம்’ என்றார்.
சிறந்த என்ஜினீயர் ஆக வேண்டும்...
ஈரோடு மாவட்ட அளவில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,188 மதிப்பெண்கள் பெற்று திண்டல் பி.வி.பி. பள்ளிக்கூட மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ 2-ம் இடத்தை பிடித்தார். இவருடைய தந்தை சி.கந்தசாமி, பெருந்துறை சிப்காட் மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக உள்ளார். தாயார் கே.சரோஜா, வீட்டை கவனித்து வருகிறார். ஒரே தங்கை ஹர்ஷினி ஸ்ரீ, 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பிரீத்தி ஸ்ரீ இந்த வெற்றி குறித்து கூறியதாவது:-
நான் மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று படித்தேன். ஆனால் கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் மாவட்ட அளவில் 2-ம் இடம் கிடைத்து உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கணினி என்ஜினீயரிங் படித்து சிறந்த என்ஜினீயர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி சுவாதி
1,200-க்கு 1,187 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தை பிடித்த ஈரோடு இந்து கல்வி நிலைய பள்ளிக்கூட மாணவி எல்.சுவாதி, வீரப்பன்சத்தரம் பெரியவலசு பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை லோகநாதன், ஜவுளித்தொழில் செய்து வருகிறார். தாயார் ஜெகதாம்பாள் வீட்டை கவனித்து வருகிறார்.
மாணவி சுவாதி கூறும்போது, ‘என்ஜினீயரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால் என்ஜினீயரிங்கில் என்ன பிரிவு எடுப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. எனது இந்த வெற்றிக்கு பள்ளிக்கூட நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்தான் காரணம், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
கலெக்டர் பாராட்டு
சாதனை படைத்த மாணவ-மாணவிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரன், இந்து பள்ளிக்கூட துணைத்தலைவர் அருண்குமார், பள்ளிக்கூட முதல்வர் ஏ.காந்திமதி, பி.வி.பி பள்ளிக்கூட தாளாளர் டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், அருணா ராமகிருஷ்ணன், முதல்வர் என்.எஸ்.கார்த்திகேயணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை: