ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 19 அரசு
பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்கும், மாநில அளவில் முதலிடத்தை
பெற்றதற்கும், ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன்
பாராட்டு தெரிவித்து உள்ளார்.
மாநில அளவில் முதலிடம்
ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய கல்வி
நிறுவனங்கள், கல்வியாளர்கள் இருந்தாலும் பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி,
பொதுத்தேர்வுகளில் முதல் இடம் பிடிப்பது என்பது எட்டாத கனியாகவே இருந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் முதன்மை
கல்வி அதிகாரிகளான குப்புசாமி, பொன்.குமார், வை.குமார் ஆகியோர் ஈரோடு
மாவட்ட கல்வித்துறையில் செய்த மாற்றங்களால் ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி
விகிதம் அதிகரித்து வந்தது. கடந்த 2012–ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.
பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதன் முதலாக மாநில அளவில் அதிக தேர்ச்சியை
பெற்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து அப்போதைய ஈரோடு மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரி ஸ்ரீதேவி தீவிர நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிக்கூடங்களில்
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் பயனாக
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஈரோடு மாவட்டம் அரசு பள்ளிக்கூட
தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தது. இந்தநிலையில்
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்ற பி.அய்யண்ணனின்
கடுமையான முயற்சியால், ஈரோடு மாவட்டம் இந்த ஆண்டு நீண்ட கால கனவாக முதல்
இடம் என்ற அந்தஸ்தை பெற்று உள்ளது. இது கல்வியாளர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.
ஆசிரியர்களுக்கு பாராட்டு
குறிப்பாக இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன் கூறியதாவது:–
இந்த வெற்றிக்கான அனைத்து பெருமைகளும்,
பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களையும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையே
சாரும், நாங்கள் வழங்கிய அத்தனை வழிமுறைகளையும் தட்டாமல் அப்படியே
நிறைவேற்றி, இந்த சாதனையை படைத்து உள்ளார்கள். எனவே ஆசிரியர்களுக்கு எனது
பாராட்டினையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக