வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு இன்று 42-வது பிறந்த நாள்: தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம்


இந்தியா 68-வது சுதந்திர நாளை கொண்டாடும் இந்த நேரத்தில், சுதந்திரத்துக்கான அடையாளங்கள் நாடெங்கும் எவ்வாறெல்லாம் பரவிக்கிடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த பின்கோடு எண் முறை, மொழி வேறுபாடு இன்றி தொலைதொடர்பை செழுமைப்படுத்தி வருகிறது. 1972 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய தபால்துறை அஞ்சல் குறிப்பீட்டு எண்ணை (பின்கோடு எண்) அறிமுகம் செய்தது. ஒரு கடிதம், நாட்டின் எந்த மூலையாக இருந்தாலும் சரியாக அதில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு எளிதில் கொண்டுசேர்க்கும் வகையில் இந்த அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறைக்கு வந்தது. 68-வது சுதந்திர தினத்தன்று, தனது 42-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது இந்த பின்கோடு எண்.

இதுகுறித்து கோவையில் உள்ள தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சலக அதிகாரி நா.ஹரிஹரன் கூறியதாவது: ‘‘பின்கோடு எண் குறிப்பிடப்பட்ட கடிதம், அந்த எண்ணின் அடிப்படையில் அதற்கான தபால்நிலைய வட்டாரத்தை எளிதில் சென்றடையும் வகையில் நாட்டை 8 பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ஆரம்ப எண்கள் கொடுத்து, அனைத்து தபால் பட்டுவாடா அலுவலகங்களுக்கும் வரிசைப்படி எண்கள் ஒதுக்கப்பட்டன.

முதல் எண் தபால்நிலையம்

6 இலக்கங்கள் கொண்ட பின்கோடு எண்களில், முதல் எண்கள் மாநில வாரியாகவும், 2 மற்றும் 3-வது எண்கள் அஞ்சல் பிரிப்பகத்தின் துணை மண்டலங்கள், மாவட்டங்கள் அடிப்படையிலும் அமைகின்றன. இறுதி 3 எண்கள் தபால் பட்டுவாடா நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டன.

பின்கோடு வரிசையில் இந்தியாவில் உள்ள முதலாவது எண் கொண்ட தபால்நிலையம் புதுடெல்லி தபால்நிலையம். இதன் எண் 110001. பின்கோடு எண், தபால் சேவைக்கு மட்டுமில்லாமல் பல வகைகளில் பயன்படுத்தப்படுவதால் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது’’ என்றார்.

இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. மாநில எல்லை, மதம், மொழி அனைத்தையும் கடந்து, முகவரி எந்த மொழியில் இருந்தாலும், புரிந்தாலும் புரியாவிட்டாலும் பின்கோடு எண்கள் அதனை சரியாகக் கொண்டு சேர்க்கும். எனவே இது இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஓர் அடையாளமாகவே இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது.அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு இன்று 42-வது பிறந்த நாள்: தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம் ——by @UC Browser

கருத்துகள் இல்லை: