: 'புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்பால், இந்தியாவின் உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு ஆபத்து ஏற்படும்' என, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசு
ஐ.பி.சி.சி., எனப்படும், நாடுகளுக்கு இடையோன சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு, ஜப்பானில் வெளியிட்டுள்ள அறிக்கை:காடுகள் அழிக்கப்படுவது, தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு போன்ற பல காரணங்களால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. புவி வெப்பமயமாகி, பல பாதிப்புகள் ஏற்படத் துவங்கியுள்ளன, கரியமில வாயு அதிக அளவில் வெளியேறுவதால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, சர்வதேச நாடுகளில், பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகளில், உணவுப் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில், காற்றின், வெப்பத்தின் தன்மை அதிகரித்துள்ளது. பருவ மழை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி புயல்கள் தாக்குகின்றன. கங்கை நதியிலும், நீரோட்டம் குறைவால், அங்கு அதிகமாக கிடைக்கும் மீன் வளம் குறையும்.
விளைச்சல் குறையும்
இதுபோன்ற பிரச்னைகளால், விவசாயத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதால், உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். அதிகமாக பயன்படுத்தப்படும், கோதுமை, அரிசி ஆகியவற்றின் விளைச்சல் குறையும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 'இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசை வற்புறுத்திஉள்ளனர்.உலக நாடுகளில் நிலவும் பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்ற அறிவியல் பூர்வமான தகவல்களை தெரிவிக்கும் இந்த அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படுகிறது; இது, 1988ல் ஏற்படுத்தப்பட்டது.இதன் தலைவராக, இந்தியரான, ராஜேந்திரா கே பச்சோரி உள்ளார்.