பள்ளி ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்
மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "மாணவ,
மாணவியர் தரமான கல்வியை பெற வேண்டுமெனில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்
அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில்
68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதுநாள் வரை 51,757 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இந்த பணி
நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்பதையும் நான்
இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த
அரசு எனது தலைமையிலான அரசு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்த வரையில்
இதுவரை, 19,673 பணியிடங் களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220
பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நடப்பு
நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப புதிய தொடக்கப் பள்ளிகளை ஆரம்பித்தல், தொடக்கப் பள்ளிகளை
நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும்,
உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்துதல் போன்ற
நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
300-க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இடத்தில் ஒரு கிலோ மீட்டர்
சுற்றுவட்டத்தில் தொடக்கப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 54
புதிய தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசு
பொறுப்பேற்றதிலிருந்து, 1,125 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம்
வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுறும் மாணவ மாணவிகள் அதே
ஆண்டிலேயே உயர் கல்வியை தொடர ஏதுவாக, தேர்ச்சி பெறாத பாடங்களின்
எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து பாடங்களையும் ஜூன் அல்லது ஜூலை
மாதங்களில் உடனடித் தேர்வு எழுத அனுமதித்தல், புகைப்படம், இருபரிமாணப்
பட்டக் குறியீடு மற்றும் கூடுதல் ரகசிய குறியீடு ஆகியவற்றுடன் கூடிய பொதுத்
தேர்வுக்கான சான்றிதழ்கள் வழங்குதல் என பல்வேறு புதுமையான நடவடிக்கைகள்
எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டு உள்ளன.
பள்ளிக் கல்வியில் இவ்வாறு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன்
காரணமாகவும், மேல்நிலை வகுப்புகளில் இடை நிற்றலைக் குறைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டதன் காரணமாகவும், பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை
கணிசமாக உயர்ந்துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165
என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் எண்ணிக்கை,
2013–2014 ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பன்னிரண்டாம்
வகுப்பை பொறுத்த வரையில், 2010-2011 ஆம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து 543
என்று இருந்த எண்ணிக்கை; 2013-2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக
உயர்ந்துள்ளது.
தேர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வில் 85.3 விழுக்காடு என்றிருந்த தேர்ச்சி விகிதம்,
2013 ஆம் ஆண்டு 89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே போன்று, 2011 ஆம் ஆண்டு
நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.9 விழுக்காடாக இருந்த
தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சிராப்பள்ளி, தேனி, தர்மபுரி
மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்
துவக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பலவகை தொழில்நுட்பக்
கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
துவங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு,
அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்
பேராசிரியர் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு
வருகின்றன.
மொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறோம்.
விரைவில் 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும்
என்பதை மிகுந்த பெருமிதத்துடன் இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக்
கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்" என்று முதலவர் ஜெயலலிதா தெரிவித்தார்.