செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

5 சதவீத மதிப்பெண் தளர்வு: தோல்வி அடைந்த 30 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வாக வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம் தளர்வு செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கடந்த 2013–ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் முதல்வர் அறிவித்ததை யொட்டி தேர்வு எழுதி தேர்ச்சி மதிப்பெண் பெற முடியாமல் விளிம்பில் தோல்வி அடைந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 55 சதவீத மதிப்பெண் பெற்றாலே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். இது அனைத்து இட ஒதுக்கீட்டாளருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 சதவீதம் மதிப்பெண் அதாவது 150–க்கு 90 மதிப்பெண்கள் தகுதித் தேர்வில் பெற வேண்டும் என இருந்தது. 5 சதவீதம் குறைக்கப்பட்டதன் மூலம் இனி 82.5 (150 மதிப்பெண்ணுக்கு) மதிப்பெண் பெற வேண்டும். அந்த சலுகை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்பதால் 83 முதல் 89 மதிப்பெண்களை பெற்று தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் டி.ஆர்.பி. இணைய தளத்தில் இன்று வெளியாகலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே தேர்ச்சி பெற்ற 27 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்து விட்டது. இப்போது கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. அரசின் திடீர் அறிவிப்பால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி வாய்ப்பை நழுவிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: