வெள்ளி, 4 ஏப்ரல், 2014

போக்குவரத்துக்கு உதவும் இரண்டாவது செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் ஏவியது

இந்தியாவின் இரண்டாவது நேவிகேஷனல் (போக்குவரத்து உதவி) செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1 பி வெள்ளிக்கிழமை மாலை இந்திய நேரப்படி 5.14 மணிக்கு பி.எஸ்.எல்.வி. - சி 24 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 58.5 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த 2ஆம் தேதி காலை 6.44 மணிக்குத் துவங்கியிருந்தது. பல்வேறு விதமான போக்குவரத்துகளைக் கண்காணிப்பதற்காக இந்தியா ஏவுவதற்குத் திட்டமிட்டிருக்கும் ஏழு நேவிகேஷனல் செயற்கைக்கோள் வரிசையில் இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1 பி இரண்டாவதாகும். இந்த செயற்கைக் கோள் 1432 கிலோ கிராம் எடையை உடையது. வெள்ளி மாலை சரியாக ஐந்தே கால் மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து முதலாவது ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டது. இதற்கு முந்தைய நேவிகேஷனல் செயற்கைக் கோளான ஐஆர்என்எஸ்எஸ் - 1 ஏ 2013ஆம் ஆண்டு ஜூலையில் ஏவப்பட்டது. முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டு ஏழு மாதங்களுக்குள்ளாகவே இந்த இரண்டாவது செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஏவப்பட்டிருக்கும் செயற்கைக்கோளின் வாழ்நாள் பத்து ஆண்டுகளாகும். நிலை நிறுத்தப்படும் புள்ளியிலிருந்து ஆயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல்வழி, வான் வழி, தரைப் போக்குவரத்து ஆகியவற்றைக் கண்காணிக்கவும் பேரிடர் கால உதவிக்காகவும் இந்தியா உருவாக்க முயற்சிக்கும் இந்தியன் ரீஜினல் நேவிகேஷனல் சாட்டிலைட் சிஸ்டம் செயல்பட வேண்டுமென்றால், நான்கு செயற்கைக்கோள்களாவது ஏவப்பட்டிருக்க வேண்டும். தற்போது இந்த செயற்கைக்கோளை ஏவப் பயன்படுத்தியிருக்கும் பி.எஸ்.எல்.வி. - சி 24 ராக்கெட் எக்ஸெல் வகையைச் சேர்ந்ததாகும். அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவப் பயன்படுத்தப்படும் இந்த ராக்கெட்டை இஸ்ரோ ஐந்தாவது முறையாகப் பயன்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இம்மாதிரி கண்காணிப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை: