அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அறிவித்தது.
அதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ந் தேதி முதல்
இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த தொகையை 1.1.14 அன்றைய தேதியில் இருந்து கணக்கிட்டு பணமாக கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி, முன்தேதியிட்டு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான அகவிலைப்படியின் பாக்கித்தொகை உடனடியாக பணமாக வழங்கப்படும். அதாவது, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த அகவிலைப்படி உயர்வு உத்தரவு அமலுக்கு வருகிறது.
யார்-யாருக்கு கிடைக்கும்?
தமிழ்நாடு அரசுத் துறைகளில் முழு நேர பணியாளர்களாக இருந்து, அகவிலைப்படியை பெற்றுவரும் அனைவருக்குமே இந்த அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவு பொருந்தும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் அல்லது அகில இந்திய கல்வி குழுமத்தின் நிர்வாகத்துக்குள் வரும் ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு டிப்ளமோ கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடல்கல்வி இயக்குனர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
அங்கன்வாடி ஊழியர்கள்
மேலும் வருவாய்த்துறையின் கீழ் வரும் கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் கிராம பஞ்சாயத்து கிளார்க்குகள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பாக்கியை எந்த வித காலதாமதமும் இல்லாமல் அரசுக் கருவூல அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும்
இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அகவிலைப்படி உயர்வினால் அரசுத் துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை, ஆயிரம் ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை கூடுதலாக பெறுவார்கள் என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது.
அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 16 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
தேர்தல் கமிஷன் அனுமதி
பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், இதுபோன்ற உத்தரவுகளை எந்த மாநில அரசும் தானாக பிறப்பித்துவிட முடியாது.
அதுபற்றி கேட்டபோது, இந்திய தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்ற பிறகே இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக