ஈரோடு,
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்து புதிய சாதனை படைத்தது.தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்று புதிய சாதனை படைத்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 183 பள்ளிக்கூடங்களில் படித்த 26 ஆயிரத்து 464 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 25 ஆயிரத்து 683 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இது 97.05 சதவீதமாகும்.
மாணவர்கள் 12 ஆயிரத்து 810 பேர் தேர்வு எழுதியதில் 12 ஆயிரத்து 355 பேர் வெற்றி பெற்றனர். இது 96.448 சதவீதம் தேர்ச்சியாகும். இதுபோல் 13 ஆயிரத்து 654 மாணவிகள் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 328 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 97.612 சதவீதம் தேர்ச்சியாகும்.
ஆக ஈரோடு மாவட்டத்தில் 97.05 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்து உள்ளனர். இதனால் தமிழக அளவில் ஈரோடு மாவட்டம் முதல் முறையாக முதலிடத்தை பெற்று சாதனை படைத்து உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் 93.35 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.28 ஆக இருந்தது.
சாதனை
இந்த ஆண்டு இதுவரை இல்லாத தேர்ச்சி விகிதத்தை பெற்று ஈரோடு கல்வி மாவட்டம் 97.05 சதவீதம் தேர்ச்சியால் புதிய சாதனையை படைத்து உள்ளது.
இதுபற்றி ஈரோடு மாவட்டத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு கலெக்டர் எஸ்.மதுமதி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் புதிய சாதனை படைத்து உள்ளது. மாவட்டத்தில் 19 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்து சாதனை படைத்து உள்ளன. இதுபோல் இயற்பியல் பாடத்தில் 208 பேரும், வேதியியல் பாடத்தில் 113 பேரும், உயிரியல் பாடத்தில் 53 பேரும், தாவரவியல் பாடத்தில் ஒருவரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
புள்ளியியல் பாடத்தில் ஒருவரும், கணினி அறிவியல் பாடத்தில் 94 பேரும், கணித பாடத்தில் 316 பேரும் 200-க்கு 200 பெற்று சாதனை படைத்து உள்ளனர். மேலும், பொருளியல் பாடத்தில் 77 பேரும், வணிகவியல் பாடத்தில் 160 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 158 பேரும், வர்த்தக கணிதம் பாடத்தில் 40 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இவர்கள் தவிர தொழிற்கல்வி மாணவ-மாணவிகள் 2642 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
இந்த சாதனை படைக்க காரணமாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் எஸ்.மதுமதி கூறினார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட வாரியாக....
மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-
ஈரோடு - 97.05
நாமக்கல் - 96.59
விருதுநகர் - 96.12
பெரம்பலூர் - 96.03
தூத்துக்குடி - 95.72
கன்னியாகுமரி - 95.14
கோவை - 94.89
திருநெல்வேலி - 94.37
திருச்சி - 94.36
திருப்பூர் - 94.12
சிவகங்கை - 94.06
தர்மபுரி - 93.24
ராமநாதபுரம் - 93.06
கரூர் -92.97
தேனி - 92.74
மதுரை - 92.34
சென்னை - 91.90
சேலம் - 91.53
திண்டுக்கல் - 90.91
தஞ்சாவூர் - 89.78
புதுக்கோட்டை - 89.77
புதுச்சேரி - 89.61
கிருஷ்ணகிரி - 89.37
திருவள்ளூர் - 88.23
காஞ்சீபுரம் - 87.96
நாகப்பட்டினம் - 87.95
ஊட்டி - 86.15
விழுப்புரம் - 85.18
வேலூர் - 85.17
கடலூர் - 84.18
திருவாரூர் - 83.70
அரியலூர் - 79.55
திருவண்ணாமலை- 74.4
சென்னை மாவட்டத்தில் தான் அதிக மாணவர்களாக 53 ஆயிரத்து 73 பேர் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டத்தில் தான் குறைந்த மாணவர்களாக 6,250 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.