ஈரோடு,
சமஸ்கிருத பாடப்பிரிவில் மாநில அளவில் முதல் 3 இடங்களை ஈரோடு மாணவ-மாணவிகள் பிடித்தனர்.சமஸ்கிருத பாடப்பிரிவில்...
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சமஸ்கிருத பாடப்பிரிவுகளில் ஈரோடு மாணவ-மாணவிகள் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளிக்கூட மாணவி என்.விஷ்ணுபிரியா சமஸ்கிருத பாடத்தை முதல் மொழியாக எடுத்து 1,200-க்கு 1,193 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
சமஸ்கிருதம் - 199
ஆங்கிலம் - 194
இயற்பியல் - 200
வேதியியல் -200
கணிதம் -200
கணினி அறிவியல் - 200
மொத்தம் - 1,193
மேற்கண்ட மதிப்பெண்களை மாணவி விஷ்ணுபிரியா பெற்று உள்ளார்.
கணினி என்ஜினீயர்
இவருடைய தந்தை நடராஜ், துடுப்பதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட தலைமை ஆசிரியராக உள்ளார். தாயார் பத்மாவதி, வீட்டை கவனித்து வருகிறார். மாணவி விஷ்ணுபிரியா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடமும், மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி விஷ்ணு பிரியா கூறியதாவது:-
நான் யு.கே.ஜி. முதல் பி.வி.பி. பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறேன். பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொடுக்கும் பாடத்தை தினமும் படித்து முடித்து விடுவேன். தனியாக டியூசன் எதுவும் செல்லவில்லை. பள்ளிக்கூட நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் சிறந்த மதிப்பெண் பெற முடிந்தது. அதுவும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில் கணினி என்ஜினீயர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே கணினி அறிவியல் எடுத்து படிக்க உள்ளேன்.
இவ்வாறு மாணவி விஷ்ணுபிரியா கூறினார்.
மாணவி ஷாலினி
அதே பள்ளிக்கூட மாணவி ஷாலினி 1200-க்கு 1192 மதிப்பெண்கள் பெற்றார். இவரும் முதல் மொழியாக சமஸ்கிருதம் எடுத்து படித்ததால், மாநில அளவில் பிறமொழி பாடப்பிரிவில் 2-ம் இடத்தை பிடித்தார்.
இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
சமஸ்கிருதம் - 199
ஆங்கிலம் - 196
பொருளியல் -198
வணிகவியல் - 199
கணக்குபதிவியல் - 200
வர்த்தக கணிதம் - 200
மொத்தம் - 1,192
மேற்கண்டவாறு மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
கோடை விடுமுறைக்காக சென்னை போரூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்த மாணவி மற்றும் பெற்றோர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஷாலினி கூறுகையில் : நான் சேலத்தை சேர்ந்தவள் எனது தந்தை தியாகராஜன் துணி வியாபாரம் செய்து வருகிறார். நான் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பயின்றேன். பிளஸ்-2 தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்காக எனது பெற்றோருடன் போரூரில் உள்ள எனது தாத்தா வீட்டிற்கு வந்தேன். நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது அதில் நான் 1192 மதிப்பெண்கள் எடுத்து தோச்சி பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடம் பிடித்துள்ளேன் என்று எனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தோழிகள் எல்லாம் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதற்கு நன்றி, சமஸ்கிருதத்தை பாட மொழியாக எடுத்து படித்தேன். நான் பள்ளியில் நடந்த தேர்வுகளில் எல்லாம் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் எனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்¢கள் என்னை திட்டாமல் உற்சாகப்படுத்துவார்கள். அதுவே எனக்கு பக்க பலமாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் டெல்லி சென்று படிக்க வேண்டும் என்று அந்த மாணவி தெரிவித்தார்.
இதையடுத்து சமஸ்கிருத மொழி பாடத்தை எடுத்து படித்து மாநிலத்தில் 2வது இடம் பிடித்த மாணவி ஷாலினிக்கு அவரது பெற்றோர்கள், உறவினர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவர் பொன்சங்கர்
பிறமொழி பாடப்பிரிவில் சமஸ்கிருதம் பாடத்தை முதல் மொழியாக எடுத்து படித்த ஈரோடு பவளத்தாம்பாளையம் ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மாணவர் கே.பொன்சங்கர் 1,200-க்கு 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
சமஸ்கிருதம் - 199
ஆங்கிலம் - 194
இயற்பியல் - 200
வேதியியல் - 198
உயிரியல் - 200
கணிதம் - 200
மொத்தம் -1,191
மேற்கண்டவாறு மாணவர் பொன்சங்கர் மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
மாணவர் கே.பொன்சங்கர், நசியனூர் அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை அதே பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் காந்திமதி வீட்டை கவனித்து வருகிறார்.
ராணுவத்தில் டாக்டர்
சிறந்த மதிப்பெண்கள் பெற்றது குறித்து மாணவர் பொன்சங்கர் கூறியதாவது:-
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தால் அனைத்து மாணவர்களாலும் சாதிக்க முடியும். நானும் சாதிக்க வேண்டும் என்று நினைத்து படித்தேன். இதற்கு எனது பள்ளிக்கூட நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் உதவியாக இருந்தனர்.
நான் ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்காக புனே ராணுவ மருத்துவ கல்லூரியில் முதல் கட்ட நுழைவுத்தேர்வு எழுதி இருக்கிறேன். அதிலும் வெற்றி பெற்று ராணுவத்தில் சேவை செய்வேன். பின்னர் பொதுமக்களுக்கு சேவை செய்வேன்.
இவ்வாறு மாணவர் பொன் சங்கர் கூறினார்.
இவரை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், பள்ளிக்கூட தாளாளர் காசியண்ணன், முதல்வர் முருகசாமி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினார்கள்.