அஞ்சல் துறைக்கு "டாட்டா;' வாடகை கார்களுக்கு "ஜாக்பாட்!' : தேர்வை நடத்த ரூ.30 கோடி செலவு
ஒன்றரை
மாதம் நடக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுப் பணியில்,
வினாத்தாள் மற்றும் விடைத்தாளை கொண்டு செல்லும் பணியில், வாடகை கார்கள்
பயன்படுத்துவதால், அவர்களுக்கு, தொடர்ச்சியாக வேலை கிடைத்துள்ளது. தேர்வை
நடத்த, 30 கோடி ரூபாயை, தேர்வுத் துறை செலவழிக்க உள்ளது. கடந்த ஆண்டு வரை,
வினாத்தாள், விடைத்தாள் போக்குவரத்து பணியில், அஞ்சல் துறையை, தேர்வுத்
துறை பயன்படுத்தியது. கடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், இரு
விடைத்தாள் கட்டுகளை, தபால் துறை ஊழியர், பஸ்சில் எடுத்துச்சென்று, தவற
விட்ட விவகாரம், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அஞ்சல் துறையின் மெத்தனம் :
அதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், ரயிலில் எடுத்துச்சென்ற
விடைத்தாள் கட்டுகள், கீழே விழுந்து சேதம் அடைந்தன. அஞ்சல் துறையின்
மெத்தனத்தால், இந்த இரு சம்பவங்களும் நடந்ததாக, தேர்வுத் துறை குற்றம்
சாட்டியது. இதன் காரணமாக, இந்த ஆண்டு, வினாத்தாள், விடைத்தாள் போக்குவரத்து
பணியில், அஞ்சல் துறையை ஈடுபடுத்தவில்லை. மாறாக, மாநிலம் முழுவதும், வாடகை
கார்களை பயன்படுத்த, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. வினாத்தாள்
பாதுகாப்பு மையத்தில் இருந்து, தேர்வு மையத்திற்கு, வினாத்தாள் கட்டுகளை
கொண்டு செல்லுதல் மற்றும் தேர்வு முடிந்தபின், விடைத்தாள் கட்டுகளை,
விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றில், வாடகை
கார்கள் பயன்படுத்தப்படும். நான்கு, ஐந்து மையங்களுக்கு சேர்த்து, ஒரு கார்
என்ற வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்துள்ளனர். இதன் காரணமாக, நாளை துவங்கி,
ஏப்ரல், 9ம் தேதி வரை, தொடர்ந்து, வாடகை கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், ஒன்றரை மாதம் வரை, வாடகை கார் வைத்திருப்பவர்களுக்கு, வேலை
கிடைத்துள்ளது. காரில், ஒரு போலீஸ்காரர், முதுகலை ஆசிரியர் நிலையில், ஒரு
வழித்தட அலுவலர் இருப்பர்.
ரூ.30 கோடி செலவு : பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்பு தேர்வுப் பணிகளுக்காக, 30 கோடி ரூபாய் செலவழிக்கப்பட
உள்ளது. மொழிப்பாட தேர்வுகளின் போது, ஒரு லட்சம் பேரும், இதர பாட
தேர்வுகளின்போது, 60 ஆயிரம் பேர் வரையும், தேர்வுப் பணிகளில்
ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு அலுவலரின் நிலைக்கு ஏற்ப, தேர்வுப்படி
வழங்கப் படுகிறது.