குரு ஒருவர் தன் மூன்று சீடர்களையும் அழைத்துக்கொண்டுகாட்டுக்குச் சென்றார். ஒரே மாதிரியான மூன்று பாறைகளைக் காட்டி அவற்றை ஏதாவது ஒரு வகையில் இல்லாமல் செய்யும்படி கேட்டுக் கொண்டார். முதல் சீடன் உடனே ஒரு மண்வெட்டியை எடுத்து பக்கத்தில் ஒரு பெரும் பள்ளம் வெட்டி, அதனுள் அந்தப் பாறையைத் தள்ளி அதன்மேல் மண்ணைப் போட்டு மூடினான். இரண்டாம் சீடன் ஒரு சுத்தியலை எடுத்து, பாறையைத் தூள் தூளாக நொறுக்கினான். மூன்றாவது சீடன் ஓர் உளியை எடுத்து, பாறையில் ஓர் அழகான சிற்பம் வடித்தான். ஆக மூன்று பேரும் அந்தப் பாறையை இல்லாமல் செய்துவிட்டனர்.முதல் சீடன் செய்தது மறைத்தல். இரண்டாமவன் செய்தது அழித்தல். மூன்றாம் சீடன் செய்தது ஆக்கல். ஆக, மூன்றாம் சீடனின் செய்கையே சிறந்தது எனப் பாராட்டிய குருநாதர், மேலும் ஓர் உபதேசமும் அதில் அடங்கி இருப்பதாகக் கூறினார். அதாவது, அவன் அந்தச் சிற்பத்தை உருவாக்கும்பொழுது புதிதாக சிற்பத்தை எங்கிருந்தோ உருவாக்கவில்லை.அந்தப் பாறையிலிருந்து தேவையற்ற பகுதியை நீக்கினான். அவ்வளவுதான்! அதேபோல் நம்மிடம் இருக்கும் தேவையற்ற குணங்களை நீக்கிவிட்டோமானால், நம்மில் ஒரு சிறந்த மனிதனைக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக